நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது உண்மைதான். ஆனால், உருப்படியான பற்கள் “வாய்”க்கப்பெறுவதுபோன்ற செல்வம் உலகின் எந்த மூலையிலும் கிடைக்காது.
பற்களை பாதுகாப்பதென்பது ஊரிலிருக்கும்போது பெரிதாக யாருமே கவலைப்படாத ஒரு காரியம். மிஞ்சி மிஞ்சிப்போனால் தெல்லிப்பளை இல்லை அச்சுவேலி ஆஸ்பத்திரிக்கு அப்பா கூட்டிப்போவார். அங்கு பல் வைத்தியர் ஒருவர் இருப்பார். அவரை பார்த்தவுடனேயே நாங்கள் குழற ஆரம்பித்துவிடுவேன். ஆனால், அவரோ தனது மீசையை பார்த்துத்தான் நான் அழுவதாக கதையை மாற்றி “உங்கட அப்பாவுக்கும் மீசை இருக்குத்தானே” – என்று பேசி பேசி முரசின் மீது ஒரு ஊசியை குத்துவார். அடுத்த கணமே அது விறைப்புக்கு போகின்ற நேரம் பார்த்து குறட்டை வாய்க்குள் விட்டு பல்லை கிளப்பிவிடுவார். அப்பிடியே அந்த ஏரியாவுக்கு பஞ்சுவைத்து அனுப்பிவிட, ராஜ மரியாதையுடன் அப்பா சைக்கிளில் இருத்தி வீட்டுக்கு கூட்டி வருவார். வரும்போது எதிர்திசையில் போய்க்கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும் எனக்கு பல்லு பிடுங்கியதை சைகையால் காண்பித்துக்கொண்டே சைக்கிளை ஓட்டுவார். வீடு வந்ததும் அம்மா ஓடி வந்து கையில் தாங்கி சென்று கட்டிலில் கிடத்துவார். என்னை இறக்கிவிட்ட வேகத்தில் அப்பா வயாவிளான் சந்திக்கு போய் ஐஸ் கட்டிகள் வாங்கி வருவார். விறைப்பு எடுபட்டால் நோவு தெரியும் என்று அந்தப்பக்கமாக ஐஸ் கட்டியொன்றை உமிழ்ந்து கொண்டிருக்கும்படி அம்மா ஊட்டி விடுவார். அது அடிக்கடி ரத்தத்தோடு சேர்ந்து வெளியில் விழும். மீண்டும் மீண்டும் உள்ளே கவனமாக தள்ளி விடுவார். சில மணி நேரமாக இந்த ஆன்மீக பல்வைத்திய நாடகம் நடைபெறும். மாலையளவில் ஒருவாறு முடிவடைந்துவிடும். அடுத்த நாள் காலை, பல்லு போன இடத்தை நாக்கினால் துழாவி பார்க்கும்போது ஆட்சியே கவிழ்ந்த மாதிரி ஒரு பீலிங் வரும். ஆனால் அது நன்றாகத்தான் இருக்கும்.
இதைத்தவிர, பல்லுக்கு நாங்கள் நேரம் செலவு செய்ததும் இல்லை. அதை பெரியளவில் கணக்கெடுத்ததும் இல்லை.
ஆனால், வெளிநாட்டில் பல் வைத்தியம் பற்றி பேசுவதானால் வயிற்றிலும் வாயிலும் அடித்து அழுது அழுது ஒப்பாரியாகத்தான் அதை பறையவேண்டும். சுருக்கமாக சொல்வதானால் மொத்த சொத்தையும் எழுதி வைத்தால்தான் ஒரு சொத்தையையாவது பிடுங்கலாம். அவ்வளவுக்கு நெருப்பு உத்தியோகம் என்றால் பல் வைத்தியம்.
பல்லை பிடித்து பார்த்தால் ஒரு பில், கிண்டி பார்த்தால் பரபரக்கும் இன்னொரு பில், கிளீன் பண்ணினால் சபாஷ் போடுகின்ற பிறிதொரு பில், பல்லை பிடுங்கப்போகிறீர்களா, கேட்கவே வேண்டாம், வாயை மூடும் வரைக்கும் மீட்டர் ஓடிக்கொண்டே இருக்கும். அதிலும் ஞானப்பல்லை பெயர்தெடுப்பதற்கு இங்குள்ள மதிப்பிருக்கிறதே. அது பிரசவத்திலும் பார்க்க அதி பிரபலம்.
இந்த மகா கொடுமைகளை தாங்கமுடியாமல் பல்லுக்கும் சேர்ந்து மருத்துவ காப்புறுதி ஒன்றை எடுத்துவிட்டு பல வருடங்களாக காத்திருந்த எனக்கு, இப்போது கட்டாயம் பல் வைத்தியரை பார்த்தேயாகவேண்டிய நிர்ப்பந்தம். எத்தனையோ குறுக்கு வழிகளை சிந்தித்து கடைசியில் பல்லை பரிசோதனை செய்வதற்கு போயாகவேண்டிய கட்டாயத்தின் பேரில் இன்று ஆஜரானேன்.
அழகான இராட்சசிகள் இருவர், எனக்காகவேதான் தாங்கள் இந்த படிப்பை படித்தமாதிரி, உள்ளே போனவுடன் “வாங்கோ வாங்கோ” – என்று அழைத்து சென்று படுக்கையில் கிடத்தினார்கள். எனக்கென்னவோ, வேள்விக்கு ஆட்டை கூட்டிக்கொண்டு போவது போலவே இருந்தது. அவர்கள் இருவரில் யார் வைத்தியர் என்று தெரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தேன். புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி யாராவது குறடு எடுக்கிறார்களா என்றும் இடையிடேயே செக் பண்ணினேன். அன்னை திரேசா போன்ற கருணையுள்ளம் கொண்ட அந்த கன்னியர் இருவரும் அண்ணாந்து விட்டத்தை பார்க்க சொல்லிக்கொண்டே நான் படுத்துக்கிடந்த கட்டிலை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்கினார்கள். “போச்சாடா சோனமுத்தா…உன்ர வாய்க்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்” – எண்டு இதயம் சீமான் கணக்கில் குழறியது. பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே படுத்துக்கிடந்தேன். சிரித்தது காணும், வாயை திறக்க சொன்னார்கள்.
இந்த பல்லு பிடுங்குவதில் மிகப்பெரிய ஜனநாயக சிக்கல் ஒன்றுள்ளது. பல்வைத்தியத்தை எல்லோரும் வெறுப்பதற்கு இதுதான் காரணம். அதாவது, உடம்பில் எங்கு வலி ஏற்பட்டாலும் ஆ என்று கத்தலாம் – குழறலாம். ஆனால், அப்படி கத்துகின்ற வாயிலேயே வலியென்றால் வேறு எந்த பாகத்தால் கத்துவது. என்னை பொறுத்தவரை பல்லு பிடுங்கும்போது மாத்திரமாவது கத்தி குழறுவதற்கு – அந்த வலிக்கு வடிகாலாக – உடலின் வேறு ஏதாவது அங்கம் திரிபடைந்திருந்தால் இந்த விடயம் அவ்வளவுக்கு பெரிய பிரபஞ்ச பிரச்சினையாக இருந்திருக்காது.
இப்போது அண்ணனின் கொட்டமெல்லாம் அடங்கி விட்டத்தை பார்த்துக்கொண்டு ஆ என்று கிடக்க, நெஞ்சில் ஏதோ விரித்தார்கள். அடுத்து தலைகீழாக கட்டி தொங்க விடப்போகிறார்களோ என்று நினைத்து முழியை அங்கும் பிரட்டி பிரட்டி பார்த்தேன். வரவேற்கும்போது அழகாக இருந்த இருவரும் இப்போது எனது பல்லை கொள்ளையடிப்பதற்காக முகமூடி அணிந்துகொண்டு நின்றார்கள். நான்கு முழிகளையும் உருட்டி, உருட்டி என்னை பார்த்தார்கள்.
இதிலிருந்து தப்புவதற்கு ஒரே ஒரு முடிவுதான் என் கண் முன் கிடப்பதாக உணர்ந்தேன். கண்ணை இறுக்கி மூடுவது. இழவெடுத்த சிறுக்கிகள் ரெண்டுபேரும் என்ன செய்தாலும் பரவாயில்லை. எட்டாம் ஆண்டில் சபாரத்தினம் மாஸ்டல் குண்டியில் பிரம்படி தரும்போது தம் பிடித்ததுபோல நன்றாக தம் கட்டி வலியை பொறுத்துக்கொள்வது. ஒரு கை பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்தாயிற்று.
ஐந்து நிமிடங்களாக கண்ணை திறக்கவே இல்லை. ஒரே பிடி. அசையவில்லை. ஏதோ வாய்க்குள் ஓட்டுகிறார்கள். இலையான் சத்தத்தில் வாய்க்குள் ஏதேதோ எல்லாம் ஓடுவதாக ஒரு உணர்வு. உள்ளே வருகிறது. வெளியே போகிறது. தூர் வாரிக்கொண்டேயிருந்தார்கள். சற்று நேரத்தில் எல்லாம் ஓய்ந்தது. சத்தம் எதுவும் இல்லை. பூனைக்குட்டிகள் போல அவர்கள் இருவரும் பேசுவதுதான் கேட்டது.
“அப்பாடா, நான் நினைத்தது போல அவ்வளவொன்றும் பெரிய பிரச்சினயில்லை போலிருக்கிறது. யாருக்கிட்ட” – என்ற வீராப்புடன் கண்ணை திறந்து பார்த்தேன். இரண்டு தெரேசாக்களும் முகமூடிகளை கழற்றிவிட்டு, புதிதாக பிறந்த குழந்தையை தொட்டிலில் போட்டு எட்டிபார்ப்பதுபோல என்னை பார்த்துக்கொண்டு நின்றார்கள். இவ்வளவு கேவலமான ஒரு பல்லை இவர்கள் பார்த்ததில்லையா, அல்லது வலி மிகுதியால் என்னையே அறியாமல் இருவரின் மீதும் காறி உமிழ்ந்துவிட்டேனா என்று சந்தேகத்துடன் பார்த்தபோதுதான் சொன்னார்கள் –
“பல்லை செக் பண்ணியிருக்கிறோம். கட்டாயம் பிடுங்கவேண்டியதுதான். அப்பொயின்மென்ட் எடுத்துக்கொண்டு பிறகு வாங்கோ பிடுங்கிவிடலாம்”
தெல்லிப்பளை அச்சுவேலி டொக்டரை மிஸ் பண்ணிய தருணம் இதுதான்.
-Theivi-