கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது.கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அத்தோடு, மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் இவ்விடயம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சரவணபவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காணாமல் போன தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென பெற்றோர் கேட்கின்றனரே தவிர நட்டஈட்டை கேட்கவில்லையென தெரிவித்த சரவணபவன், அவர்களுக்கு என்ன நடந்தது, கொலை செய்யப்பட்டால் யாரால் கொலை செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன தண்டனை என்றே கேட்கின்றனர் என குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்றும் அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் பிரதமர் ரணில் கூறியிருந்த நிலையில், அவ்வாறு பிரதமர் கூறுவாராக இருந்தால் எதற்காக இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் என்றும் வினா எழுப்பினார்.
இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது தானே என்றும் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, போர் உக்கிரமடைந்த காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே இருந்தனர் என கடந்த அரசாங்கமும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கூறியபோதிலும், போர் முடிந்த பின்னர் முகாமில் மூன்று இலட்சம் மக்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என சரவணபவன் சுட்டிக்காட்டினார். இவ்வாறு 250,000 மக்கள் தொகையை குறைத்து கடந்த அரசாங்கம் பொய் கூறியுள்ளதென்றும் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.