19.04.2019 வெள்ளி அன்று வயவைத்தாய் தன் பிள்ளைகள் அனைவரையும் அன்போடு கரம்கோர்த்து அழைக்கின்றாள்!

அன்புக்குரிய வயவை உறவுகளே!

வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்தில், எதிர்வரும் 19 04/2019 சித்திரைப் பெளர்ணமி விடுமுறை தினத்தன்று வயவையை ஆணி வேராக கொண்டு, எந்த திக்கில் நீங்கள் வாழ்ந்தாலும்,அன்றைய நாளில் அனைவரும் ஒன்றுகூடிப் பூசை வழிபாடுகள் இடம்பெற இருக்கின்றது. அன்றைய விசேட தினத்தில், நாம் அனைவரும் கையொப்பம் இட்டு எழுத்துபூர்வமான கோரிக்கைமனுவொன்றை இராணுவ அதிகாரி மற்றும் அரசியல் பிரதிநிதிகள், ஆளுனர், அரசாங்க அதிபர் போன்ற அனைவருக்கும் சமர்ப்பிக்கவுள்ளோம்.இது பற்றி நாம் அனைவரும் கூடி ஆராய்ந்து கோரிக்கை மனுவில் கையொப்பம் இடுவதற்காகவும் ஒன்றுகூடவுள்ளோம்.

எம் வளம் நிறைந்த மண்ணில் வாழ்ந்த சிறு வயதில், பொங்கல் என்றால் வெடியும், தீபாவளி என்றால் வாழ்த்து மடலும் நினைவுக்கு வருவது போல், சித்திரை வருடப்பிறப்பு அன்று கைவிஷேடமும் கோவில்களில் நடக்கும் சிறப்புப் பூசைகளும் நினைவுக்கு வரும். அதிகாலையில் எழுந்து, மருத்துநீரில் தலை தோய்ந்துவிட்டு, வீட்டில் என்னதான் கஷ்டம் இருந்தாலும் வாங்கிய புது உடுப்பைப் அணிந்து கொண்டு, எமது குல தெய்வங்களை நோக்கி நாம் அனைவரும் சென்று வருவது எமக்கு வழக்கமான ஒன்றாகும்.

அந்த இனிய நாட்களை மீண்டும் நாங்கள் அனுபவிக்க வேண்டுமாயின், எங்கள் வயவையூர்க் கோவில்கள் எங்களுக்கு நிரந்தரமாக வேண்டும். ஆகவே 19/04/2019 வெள்ளிக்கிழமை விடுமுறை அன்று மானம்பராய்ப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு நடக்க இருக்கின்றது. ஆகவே அனைத்து வயவர்களையும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.

 

ஆக்கிரமிப்பில் உள்ள பிரதேசங்களில் காலம் காலமாக வாழ்ந்த நாங்கள், புலத்தின் வேறுபிரதேசங்களிலோ, அல்லது புலம்பெயர் தேசங்களிலோ நிரந்தவாழ்விடங்களை அமைத்து விட்டார்கள் என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் உள்ளதாக அறியப்படுகிறது. எனவே எங்கள் தாய் மண்ணிலேயே எங்களை வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் இக்கோரிக்கை அமையும் என்பதால் இக்கையெழுத்து மனு சமர்ப்பிக்கும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்று பட்டு கவனம் செலுத்துவோம். அனைவரும் தவறாமல் கலந்து எம் மண்ணுக்கு பலம் சேர்க்க வேண்டிய தான்மீக பணியில் நாம் அனைவரும் இணையவேண்டும்.

 

தேவிபுரம் உடையார்கட்டு விசுவமடு பகுதி மக்கள் செல்வதற்கு விசேட பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எங்கு நீங்கள் வாழ்ந்தாலும் விடுமுறையான அந்த நாளில் அனைத்து வயவர்களும், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தி எம்பெருமான் விநாயகனை தொழுது செல்லுங்கள். கடும் போர் மேகம் சூழ்ந்த காலத்தில், எம்மூர் குல தெய்வங்கள் தான் எங்களுக்கு குறைவான உயிர் சேதங்களுடன் எங்கள் அனைவரையும் காப்பாற்றின என்பதை மறந்து வாழ்த்து விடாதீர்கள்.

நன்றி
ஏற்பாட்டாளர்கள்