யாழ்.வயாவிளான் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் புதிய மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுத் திங்கட்கிழமை(25)நடைபெற்றது.
பல வருடங்கள் பழமை வாய்ந்த இந்தப் பாடசாலை சொந்தவிடத்தில் இயங்கிய போது சுமார்-417 மாணவர்களுடன் இயங்கி வந்தது. கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக கடந்த-1988 ஆம் ஆண்டு முதல் இந்தப் பாடசாலை அறவே இயங்காதிருந்தது.
கடந்த-2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் பாடசாலை முன்னர் இயங்கி வந்த வயாவிளான் உத்தரிய மாதா தேவாலயத்தை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன.
எனினும்,யுத்தம் காரணமாகப் பாடசாலை கடுமையாகச் சேதமடைந்த காரணத்தால் பாடசாலையை உடனடியாகச் சொந்தவிடத்தில் மீள இயக்க முடியாத இக்கட்டான நிலையேற்பட்டது.
கடந்த-2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உரும்பிராயில் இயங்கி வந்த ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் இந்தப் பாடசாலை முதலாம் தரத்தை மட்டும் கொண்டதாக இயங்க ஆரம்பித்தது.
இந்நிலையில் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் வயாவிளான் மத்திய கல்லூரியின் ஒரு பகுதியில் இந்தப் பாடசாலை தற்காலிகமாக இயங்க ஆரம்பித்துப் பல்வேறு சிரமங்களின் மத்தியில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தப் பாடசாலையை சொந்தவிடத்தில் மீண்டும் இயங்க வைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் கல்வியமைச்சின் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் பாடசாலைக்குப் புதிய இரண்டு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
நேற்றுப் பிற்பகல்-01 மணி முதல் அதிபர் ந.இரவீந்திரன் தலைமையில் சொந்தவிடத்தில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வரட்ணம் சந்திரராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தார்.
வயாவிளான்-அச்சுவேலி பங்குத் தந்தை எம்.ஜெயக்குமார், அருட்தந்தை சிங்காராஜர்,தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.ஆனந்தகுமார், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,அயற்பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் ந.இரவீந்திரன் இதுதொடர்பில் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை வரலாற்றில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்னாளாகும்.
கடந்த- 1988 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இந்தப் பாடசாலையின் கட்டடங்கள் அழிவுற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் பல வருடங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்தப் பாடசாலை கடந்த இரண்டு வருடங்களாக பலவித கஸ்டங்களின் மத்தியில் இந்தப் பாடசாலை வயாவிளான் மத்திய கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இந்தப் பாடசாலைக்கென புதிய இரண்டு மாடிக் கட்டடத்தை அமைப்பதற்காக பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
news Source: http://www.jaffnavision.com/2019/03/26/vayavilan-roman-katholika-school/?fbclid=IwAR3-GEgubASVOrLRBtPCYu9kCYxDDEPtYhX5hlHGkwV_m3tun6DhH_bPTAE