முப்பது வருடத்தின் பின்பு மீண்டும் ஒளிமயம் காணும் எங்கள் வயவையூர்!

1990 நடுப்புகுதியில் இருந்து இந்த வருட நடுப்பகுதி வரை இராணுவ உயர் பாதுகாப்பு வலய கட்டுப்பாட்டில் இருந்து வந்த எமது ஊர் சார்ந்த நிலங்கள் கொஞ்சம் கொஞ்சம் ஆக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறுவதை அனைவரும் அறிந்து இருப்பீர்கள். பல போராட்டங்கள் பல கோடி மதிப்புள்ள சொத்திழப்புக்கள் மற்றும் பல மாவீரச்செல்வங்களின் வீரம் நிறைந்த உயிர் தியாகங்கள் நிறைந்த எமது மண் மீண்டும் பழைய நிலைக்கு புத்துயிர் பெறுவதை பார்க்கும் போது கனத்த இதயத்தில் ஒரு பகுதி ஆறுதலை தருகின்றது.

 

வயாவிளான் ஊரை சூழவுள்ள மக்களால் வணங்கப்பட்டும் வழிபடப்பட்டும் வந்த ஆலயங்களில், ஒரு சில பகுதி மீண்டும் புத்துயிர் பெறுவதினை அவதானிக்கும் போது எமது ஊரும் மீண்டும் பழைய நிலைக்கும் திரும்பும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர் போல் சிந்திக்க தோன்றுகின்றது. அதிலும் குறிப்பாக ஒரு சில ஆலயங்களின் மீள் ஏழுர்ச்சியை பார்க்கும் போது வியப்புடன் கூடிய ஆனந்தமும் மனதில் மிளிருகின்றது.

அண்மையில், வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயமும், அதனுடன் சேர்ந்த குடியிருப்புப்பகுதிகளும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட போது வெளிவந்த புகைப்படங்களும், இப்போது வெளிவரும் புகைப்படங்களையும் உற்று நோக்கும் போது, விடுதலை பெற்ற சில நாள்களிலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், சில வருடங்களின் பின்பு எமது ஊர் எப்படி முன்னேற்றம் காணும் என்பதை கற்பனையுடன் கூடிய நிய யாதார்த்தை நாம் நேரில் காணலாம்.

நான் சின்ன வயது நிறைந்தவனாக இருக்கும் போது வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் முன்னரங்கில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என் நினைவுக்கு தெரிந்தளவில் அனுரா இசைக்குழுவின் முன்னணி பாடகர் சுகுமாரின் குரலில் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் என்று பாடல் பாடப்பட்டது. இன்றும் அந்த இசை ஓட்டத்தின் நினைவுகள் என் மனதில் வீணை மீட்டி போகின்றது.

வயாவிளான் ஞானவைரவர் பெருமானின் அருள் பாலிக்க அனைத்து சிரமாதானா வேலைகளும் சிறப்புடன் நிறைவுபெற்று மீண்டும் எமது மண்ணின் கோவில்களின் ஆலய மணிகள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுவே அடியானின் விருப்பமாகும்.